புதன் 27, மார்ச் 2019  
img
img

சீதக்காதி  விமர்சனம்
சனி 22 டிசம்பர் 2018 17:28:40

img
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழியை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட படம். உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றால் அது இறப்பு. சென்ற உயிர் என்ன செய்கிறது என்பதை அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அப்படி எடுக்கப்பட்ட கற்பனைக் கதை. என்றாலும், அதை நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும். சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை, இரண்டு மணி நேரம் ரசிகர்களை சிரிக்க வைத்தால் போதும் என்று நினைக்கிற கதாசிரியர்கள் இருக்கும் வரை இதுபோன்ற கற்பனைக் கதைகள் வரத்தான் செய்யும். 
 
ஆதிமூலம் (விஜய் சேதுபதி) ஒரு நாடக நடிகர். மேடை நாடகங்கள்தான் அன்றைய காலகட்டத்தில் அதாவது 1930 ல் பொழுதுபோக்கு சாதனம். பொதுமக்கள் முன்னிலையில் ஒரு கதையை நடித்துக் காட்டுவார்கள். அதை பார்ப்பதற்கு அன்றைய காலகட்டத்தில் மக்கள் அலைமோதுவார்கள். இப்போது திரையரங்குகளில் மோதுவதுபோல. சினிமா வந்தபிறகு மேடை நாடகங்களை பார்ப்பதற்கு ஆள் இல்லை. நாடக அரங்கங்கள் வெறிச்சோடி கிடக்கிறது. ஆனாலும் ஆதிமூலம் நாடகம் நடத்துகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காமல் மேடை நாடகத்திலேயே நடித்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே இறந்து விடுகிறார். இதிலிருந்துதான் கதை ஆரம்பம் ஆகிறது. 
 
நாடக அரங்கத்தில் ஒரு நாடகம் நடக்கிறது. அதைப்பார்க்க வந்திருந்த 10த்தோடு 11 என்று சொல்வார்களே அதைப்போல் 11 ஆளாக சினிமா இயக்குநர் ஒருவர் வருகிறார். அங்கு நடித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் நடிப்பை பார்த்து பிரமித்துப் போகிறார். தனது கதைக்கு இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து நாடக நிர்வாகியை (மெளலி) அணுகி இந்தப் பையன் மிகத் திறமையாக நடிக்கிறார். எனது படத்தில் கதாநாயகனாக நடிக்க வரவேண்டும் என்று கேட்கிறார். இதே நாடகம் நாளையும் நடக்கும் அப்போதும் வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார். மறுநாள் அதே இயக்குநர் வந்து நாடகத்தைப் பார்க்கும் போது ஏற்கனவே நடித்த பையனின் நடிப்பு சரியாக இல்லை. வேறு ஒருவர் நடிக்கும் நடிப்புதான் பிரமாதமாக இருக்கிறது. இதைப்பார்த்த இயக்குநர் நேற்று நடித்த நடிப்பிற்கும் இன்று நடித்த நடிப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று நாடக நிர்வாகியிடம் கூறுகிறார். இதற்கு மெளலி சொல்லும் பதில்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கும். ஆம். நேற்று நடித்தது அந்தப் பையன் இல்லை. எங்கள் அய்யா ஆதிமூலம். இன்று வேறு ஒருவரின் உடம்பில் புகுந்து நடித்தார் என்று கூறுகிறார் மெளலி. அதாவது நிர்வாகி.  
 
மாரியாத்தா ஒருவரின் உடம்பில் வந்து சாமி ஆடும்போது, ஆதிமூலம் அய்யா ஒருவரின் உடம்பில் வந்து நடிக்கக் கூடாதா என்ன? என்று நமக்கு நாமே சமாதானம் கூறிக்கொண்டால்தான் படத்தை ரசிக்க முடியும். அறிவுக்கு பொருத்தமானது இல்லையே என்று நினைத்தால் இப்போது எந்த சினிமாவையும் பார்க்க முடியாது. சரி இது ஒரு பொழுதுபோக்கு கதை என்ற ரீதியில்தான் ஏற்றுக் கொள்ள முடியும். 
 
இறந்துபோன ஒருவரின் ஆன்மாவுக்கு  கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கும் விந்தை அரங்கேறுகிறது. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மெளலியிடம் வந்து கதை சொல்கிறார்கள். இந்த கதை அய்யாவுக்கு பிடிக்கும் நடிக்க வருவார் என்று கூறிகிறார் மெளலி. உடனே அட்வான்ஸ்சும் கொடுக்கிறார்கள். பாதிபடம் முடிந்த நிலையில் திடீரென்று அய்யா நடிக்க வரவில்லை. ஏன் நடிக்க வரவில்லை என்பதை இயக்குநர் பாலாஜி பரணிதரன் உச்சக்கட்ட காட்சியில் புரட்சிகரமாக விளக்குகிறார்.
 
அய்யா ஆதிமூலமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் 25 வது படம் இந்த சீதக்காதி. மிகவும் அற்புதமான நடிப்பு. வயோதிக ஒப்பனை அசரவைக்கிறது. உற்றுப் பார்த்தால்தான் சேதுபதி என்பதை புரிந்து கொள்ள முடியும். நாடக நடிகர்களின் வறுமையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மேடையில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே உயிர் பிரியும் நடிப்பு அனைவரின் கண்களிலும் நீர் சுரக்க வைக்கிறது. நடிப்பின் முதிர்ச்சி விஜய் சேதுபதியின் கண்களில் தெரிகிறது. மேடை நாடகத்தின் இலக்கணம் பிசகாமல் நடிப்பது சுலபமல்ல. ஆனால் சுலபமாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேடையில்தான் நடிததுக் கொண்டிருக்கின்றோம்  என்ற உணர்வோடு நடித்திருக்கிறார். இளம்வயதிலும் அவ்வை சண்முகம் அவ்வையாராக வரும் காட்சியை, விஜய் சேதுபதியின் முதுமை நடிப்பில் காண முடிந்தது. 
 
தனது உடம்புக்குள் அய்யா ஆதிமூலம் ஆன்மா வராமல் இருக்கும்போது, அந்த நடிகர்கள் சுயமாக நடிக்கத் தெரியாமல் நடிக்கும் நடிப்பு சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரித்துவிடுவார்கள். 
 
சீதக்காதி, பகுத்தறிவுக்கு இடம் தராமல் பார்த்துவிட்டு வரலாம்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img