புதன் 27, மார்ச் 2019  
img
img

கோட்டையில் காவி கொடி: பாஜகவின் "ஆபரேஷன் ரஜினி" வியூகம்... சாகசமா? சர்க்கஸ் காட்சியா?
திங்கள் 15 ஜனவரி 2018 18:11:40

img

சென்னை:

திமுக- அதிமுகவுக்கு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைத்து களமிறங்கும் பாஜகவின் வியூகம் சாகசமாக சாதிக்குமா? அல்லது சர்க்கஸ் போல வேடிக்கை காட்சியாகிவிடுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் ஆளும் கட்சியை உடைத்து விலைக்கு வாங்கி அந்த பிரமுகர்கள் மூலம் தேர்தலை சந்திக்கும் 'வாடகை' அரசியலைத்தான் பாஜக கையாண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த வாடகை அரசியல் வியூகம் நன்றாகவே பாஜகவுக்கு கை கொடுத்தது. ஆனால் தென்னிந்தியாவில் இது பல்லிளித்துதான் போனது. கேரளாவில் ஈழவர் சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனை கட்சி தொடங்க வைத்தது பாஜக. இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்து வரும் ஈழவர் சமூகத்தை தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என கணக்குப் போட்டு பார்த்தது பாஜக.

அத்துடன் அமிர்தானந்தமாயி சீடர்களை முழுவீச்சில் களமிறக்கிப் பார்த்தது. கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அது கை கொடுக்கவில்லை. குஜ ராத்திலும் காங்கிரஸில் இருந்த வகேலாவை வெளியேற்றி தனிக்கட்சி தொடங்க வைத்தது பாஜக. ஆனால் அங்கு பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த பட்டேல்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என கணிசமானோர் காங்கிரஸுக்கு தாவிவிட்டனர். இதனால் நூலிழையில்தான் குஜராத்தில் வெல்ல முடிந்தது.

கர்நாடகாவில் இழந்து போன ஆட்சியைக் கைப்பற்ற உத்தரப்பிரதேச பாணி கலவரங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக. ஆனால் என்னதான் தலைகீழாக நின்றாலும் இம்முறை பாஜக கர்நாடகாவில் வெல்ல முடியாது என்பதற்கு அமித்ஷாவின் பிரசாத்துக்கு வந்த கூட்டமே சாட்சி. பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் இம்முறை தனி மத அங்கீகாரம் கோரி காங்கிரஸ் அணியில் இருக்கின்றனர்.

கர்நாடகா பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருப்பது ஒக்கலிகா சமூகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தான். இந்த சூழலில் தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலிலும் 2016 சட்டசபை தேர்தலிலும் பலவித பகீரத முயற்சிகளை எல்லாம் பாஜக மேற்கொண்டு பார்த்தது. ஆனால் பாஜகவை ஒரு பொருட்டாகவே தமிழகம் மதிக்கவே இல்லை. அதனால்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாவிடம் தோற்றுப் போனது பாஜக.

தற்போதைய அரசியல் சூழலில் வெளிப்படையாக அதிமுகவுடன் கூட்டணி என அறிவிக்கவும் முடியாமல் இருக்கிறது பாஜக. ஆனால் தங்களைக் காப்பா ற்றிக் கொள்ள துடிக்கும் அமைச்சர்களோ பாஜகவுடனும் கூட்டணி அமைப்போம் என்கின்றனர். திமுகவிலும் சலசலப்புகள் தென்படுகின்றன. ஆனால் அவர்கள் பாஜகவுடன் போய் சேர முடியாதவர்களாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது ஒரு வெற்றிடமாக இருந்தாலும் கூட பாஜகவை ஒரு மாற்று சக்தியாக எவருமே நினைத்து கூட பார்க்கவில்லை. இப்பட்டவர்த்தனமான உண்மையை ஒப்புக் கொண்டுதான் இப்போது ரஜினிகாந்த் எனும் முக மூடியுடன் களத்துக்கு வருகிறது பாஜக. ரஜினிகாந்துக்கு இருக்கும் சினிமா செல்வாக்கு வாக்குகளாகும்; சென்னை கோட்டையில் காவி கொடி பறக்கும் என மிதப்பில் இருக்கிறது பாஜக. இதனால் அதிமுக, திமுகவில் இருப்பவர்களை ரஜினி பக்கம் அனுப்பி வைப்பதில் டெல்லி படுதீவிரமாக இருக்கிறது.

பாஜகவில் சேர்ந்தால்தானே சிக்கல்.. ரஜினியுடன் இணைந்து பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கலாம் என்கிற நினைப்பிலும் இரு கட்சிகளிலும் பலரும் பேச்சு களில் குதித்துள்ளனர். ஆனால் சிவாஜிகணேசன் எனும் மாபெரும் நடிகர் திலகத்தை அதுவும் மண்ணின் மைந்தனின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியதும் இதே தமிழ் மண்தான்.

இத்தனைக்கும் தமிழக முன்னேற்ற முன்னணி என தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டுதான் சிவாஜி அரசியலுக்கு வந்தார். ஆனால் அவரையே நிராகரித்தார்கள் தமிழக மக்கள். இப்போது தமிழகம் அசூயையாக பார்க்கிற ஆன்மீகத்துடன் அரசியலுக்கு வருகிறார் ரஜினி என்கிற போது இது சாகசமாக திகழப் போகிறதா? அல்லது சர்க்கஸ் காட்சியாக நிகழப் போகிறதா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாகும்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்!

மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில்

மேலும்
img
சினிமா பாணி பேச்சு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா

மேலும்
img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img