img
img

போகவேண்டிய உயிரா நவீனின் உயிர்?
திங்கள் 19 ஜூன் 2017 18:42:43

img

சாணக்கியன்

இந்திய சமூகத்தால் விதைக்கப்படும் வீரியங்கொண்ட திறனாளிகள்  விருட்சமாகி நிழலைப் பரப்புவதற்கு முன்பாகவே  விரைவில் புதைக்கப்படுவது அல்லது விரட்டி ஒடுக்கப்படுவது என்பது மலேசிய சட்ட அத்தியாயத்தில் எழுதப்படாத ஒரு விதி. அதிலும் தன் தலைமுறையைக் காக்க தலையெடுத்து ஒருவன் நிற்பான் எனில் தலைகள் பல குவிந்து அவன் தலையை வீழ்த்தும்வரை தணியாத வெறிகொண்டு தாக்குகின்ற, தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்ற தமிழர் சமூகத்தின் ஒரு தரப்பு இன்னும் வாழ முற்படும்வரை நமக்கேது விடிவு?

அறுபது ஆண்டுகால வரலாற்றில் தமிழர் சமுதாயம் அற்ப உரிமைகளைப் பெறுவதில்கூட அரசுடன் முட்டி மோதி, முடிந்தால் கெஞ்சிக் கேட்டு, தமிழர் வீர மாண்பு மறந்து  வீதியில் இறங்கி போராடி வாழும் அவல வாழ்க்கை வாழும் நாம், நம்மை நாமே கொன்று, வஞ்சித்து, பழிதீர்த்து இன்னும் எத்தனை நாள் காலம் கடத்தப்போகிறோம்?  தடைகளை ஒன்றிணைந்து எப்போதுதான் தகர்த்தெறியப்போகிறோம்?

நல்லொதோர் வீணை செய்தே அதை நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்ற பாரதி பாடல் நவீனுக்கே எழுதப்பட்டதா? உனக்கென ஒரு பாதையை உருவாக்க நீ தவறிவிட்டாய். ஆனால் தனக்கென ஒரு பாதையில் வெறிகொண்டு பயணிக்கும் மற்றவனை நீ கொன்று வென்றது என்ன? நீ கொன்றபின் அவனை வென்ற பின் திரும்பி எழுந்து வருவதற்கென்ன திரைப்படமா  நீ திரைப்படத்தில் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் திணிப்பதற்கு?

ஆஸ்காரை வென்றெடுத்த  ஏ.ஆர். ரஹ்மானை ஈன்றெடுத்த ஒரு குடும்பத்தை இன்று உலகத் தமிழினமே கர்வம்கொண்டு, மதம் மறந்து இனம் பொருந் திக் கொண்டாடுகிறது. அந்த இலட்சிய வேட்கை கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வெறியை ஒரு  தரப்பு மூச்சுவிடாத மூளைச்சாவாக முடித் திருக்கிறது என்பது எப்பேர்ப்பட்ட கொடூரச் செயல்?

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது நிஜமானால் சட்டவாளர்கள் தங்கள் கடமை தவறுவது ஏன்? இவன் குற்றவாளி இல்லை என வாதிட வரிந்து கட்டி வருவது ஏன்? இது எவ்வகையில் சட்ட தர்மம்? தண்டிக்கப்படவேண்டியவனை தற்காத்து தப்பிக்கவைக்கும் சட்டவாளர்கள் இருக்கும்போது தண்ட னைதான் குறையுமே தவிர குற்றவாளிகளால் நிறையும் நம் சமூகம். 

குற்றம் புரிந்து உயிராய் சிறைக்குப் போனவன் பிணமாய் திரும்பிவந்த துயரங்களின் பின்னணியில் எத்தனை எத்தனை தமிழர்கள் இதுவரை? பால முருகன் தொடங்கி பல உயிர்கள் தடமின்றிப் போன மடைமைச் சமூகமாக ஏனோ உங்கள் வாழ்வை சிதைத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குள் ஒரு உயிர் என்பதைவிட உங்களின் பின் எத்தனை உயிர், உன்னால் உன் உறவின் வயிற்றுள் ஒரு உயிர் என நகல்களை அதிகமாக்கி அகலக் குற்றம் புரிந்து விதி தவறி வாழ்வதில் என்னடா நியாயம் இருக்கிறது?  

போகவேண்டிய உயிரா நவீனின் உயிர்? அது உலகில் எதுவோ ஆக வேண்டிய இலட்சியத்துடன் உலவிவந்த உயிரல்லவா? வெறும் சதைப் பிண்டத்தை பெரும் கதைக் கனவோடு கருவிலிருந்து அடைகாத்து இறக்கிவைத்த அந்த தாயின் கண்ணீருக்கு யாரிடம் என்ன பதில் என்ன இருக்கிறது? உன்னை நம்பி உன்னுடன் வாழ என உன் சமூகத்தில் இறக்கிவைத்த அந்த இளசுவின் இதயத்தில் இரத்தக் கசிவை கொடுத்ததில் என்ன சுகம் இந்த தரம்கெட்ட தரப்பிற்கு?

பிள்ளை ஒன்றை இழந்து நிற்கிறோம் என்பதில் பிரதமரின் அனுதாபம் மருந்தாகுமா? பிள்ளைகளை நாம் இனி இழக்கமாட்டோம் என்பதில் பிரதமரின் உறுதி ஒன்று விருந்தாகுமா? பள்ளியில் குண்டர்தனம் இன்று நேற்று முளைத்ததா? தமிழ்ப்பள்ளிகளில் குண்டரியம் இதுவரை அரசு அறியாததா? எங்கள் பிள்ளைகளை நாங்களா குண்டர்களாக்கினோம்? இதற்குள்ளும் ஒரு அரசியலா? இல்லை அரசியலால் விளைந்த விபரீதமா? 

கலை, கலாச்சரம், பண்பாடு, அறிவாற்றல், திறனாற்றல், ஒழுக்கம் என அத்தனை மாண்புகளையும் கற்றுத்தரும் கலாசாலையான பள்ளிகளில் இன்று நாம் கற்றுக்கொள்கின்ற பாடம்தான் என்ன? பள்ளி மாணவரிடையே போதைப்பொருள், பள்ளி மாணவன் செருப்பால் தாக்கப்பட்டான், பள்ளியில் பகடிவதை, பள்ளி மாணவரிடையே குண்டர் கும்பல், பள்ளியின் முன்னே கேங் கூடி கேக் வெட்டினர், பள்ளி மாணவி பலாத்காரம்.... இன்னும் பல. இது ஒரு நல்ல சமூகத்தின் எழுச்சிக்கான அறிகுறியா? அல்லது வீணாகப்போகிறோம் என்பதற்கான சிவப்பு சமிக்ஞையா?

பல்லாயிரம் கண்களை கண்ணீரால் நனைத்த நவீனின் உயிர்ப்பிரிவு அவன் மாபெரும் கலைஞனாகி அவன் இசைக்கும் இசையால் கூட நனைந்திட வாய்ப்பில்லை. நவீனுக்காக மக்கள் தம்மைக் கரம் பற்றிய   ஆயிரம் மெழுகுவர்த்திகளுக்கும் தெரிந்திருக்காது இத்தனை விரைவாய் அணைவான் என்று.

சமூக வலைத் தளங்கள் சற்றே தம்மை மறந்து நவீனுக்காக இயங்கின. அவன் செய்தியை நாடறிய துடித்தன. நவீனின் தாய் ஒரு மகனை இழந்தாள். பல்லாயிரம் மகன்களை ஏற்றாள்.

விழித்துக் கொண்டது ஒரு சமூகம். நவீனின் அழிவில் பல பாடம் கற்றுக்கொண்டது இளைய வர்க்கம். இரக்கமற்றவர்களாக ஆங்காங்கே விளைய முனையும் வித்துக்களை ஈரமுள்ளவர்களாக மாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்? அவர்கள் என்ன களைகளா களைந்தெறிவதற்கு? உயிர்கள். வழிகள் உண்டு. வாழ அல்ல. வரும் காலம் பறை போற்றும் சிறந்த சமூகமாக வாழ்ந்திட.

வா. உன் வரலாற்றை புரட்டிப் பார். நீ எங்கோ ஒரு தொலைவில் சிறு புள்ளியாக நிற்கிறாய் என்பதை நீ உணர. 

தம்பி நவீன் பகடிவதையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருவன் அல்ல. ஆனால் நவீன்தான் பகடிவதை காவுகொண்ட கடைசி ஒருவனாக இருக்க வேண்டும். இதுதான் அவனின் பிரிவின்வழி பெருக்கெடுத்தோடிய  கண்ணீர் ஆற்றின் வழி மிதந்து வந்த செய்தியாக இருக்கிறது. 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பகடிவதை பிரச்சினைகளுக்கு வன்செயல் திரப்படங்களும் ஒரு காரணம்

(எம்சிபிஎப்) உதவித் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை

மேலும்
img
நவீன் குடும்பத்திற்கு மாதாந்திர சொக்சோ  உதவி!

மேலும், நல் லடக்கச் சடங்கிற்கான கட்டணமாக வெ.2,000-க்கான

மேலும்
img
60 வினாடிகளில் வெ. 25 லட்சம் நகைகள் கொள்ளை!

தலைக்கவசம் அணிந்திருந்த நான்கு ஆடவர்கள் திடீரென உள்ளே

மேலும்
img
பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் யாரும் பிரதமராகலாம்.

வான் அஜிஸா பதில்

மேலும்
img
தேசிய முன்னணி தோற்றால் நாட்டில் அவசரகாலப் பிரகடனமா?சாத்தியத்தை மறுக்கவில்லை

துன் டாக்டர் மகாதீர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img