வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

அப்பா - விமர்சனம்
வெள்ளி 15 ஜூலை 2016 13:00:13

img

GALLERY CLICKE HERE ‘உங்கள் மூலம் வந்த புனித ஆத்மாக்களான குழந்தைகளை வளர்க்காதீர்கள்... உயர்த்துங்கள்’ என்று, அப்பாக்களுக்கு மகன்களின் மூலம் பாடம் சொல்லும் ஓர் அப்பாவின் கதை இது. தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து வளர்க்க வேண்டும் என்பது, சமுத்திரக்கனியின் கனவு. தன் மகன் மார்க் எடுக்கும் இயந்திரமாக மாறி, ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டாக்டராகி அமெரிக்காவில் வேலைபார்க்க வேண்டும் என்பது தம்பி ராமையாவின் ஆசை. இருக்கும் இடமே தெரியாமல், ஒதுங்கியே வாழ வேண்டும் என்று, தன் மகனுக்கு கற்றுக் கொடுக்கும் நமோ நாராயணன். கஷ்டப்பட்டாவது படிக்க வைப்பது கடமை. படிப்பது தன் மகளின் பொறுப்பு என்று வாழும் இட்லி கடைக்காரர், திண்டுக்கல் அலெக்ஸ். இந்த அப்பாக்களில், யார் பாணி சரியானது? குழந்தைகளைத் தவறாக அணுகுவதாலும், தவறான வழிகாட்டுதலாலும் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை, இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இந்த ‘அப்பா’. நேர்மையான தகப்பனாக சமுத்திரக்கனியை பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் கூடுதல் ஸ்பெஷல். தவறான முடிவுகளை எடுக்கும் மனைவியை சகித்துக்கொள்வதும், மன்னிப்பதுமான கூடுதல் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. மகனுக்குள் இருக்கும் நீச்சல் திறமையைக் கண்டுபிடித்து, அவனை அதே வழியில் கொண்டு சென்று, கின்னஸ் சாதனை படைக்க வைப்பது சரியான விஷயம். மகனைக் காணாமல் தேடி அலையும் அந்த 5 நிமிட காட்சியில், சமுத்திரக்கனியின் தவிப்பு பெரிதா? இளையராஜாவின் பின்னணி இசை பெரிதா என்று பட்டிமன்றமே நடத்தலாம். மகனை மதிப்பெண் இயந்திரமாகப் பார்க்கும் தம்பி ராமையாவை, பளாரென்று அறையலாமா என்று தோன்றுகிறது. அப்படியொரு நடிப்பு. சில நேரம், கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. கடைசியில், மகனின் நிலையறிந்து நிலைகுலைந்து போகும் காட்சியில், உருக்கம். அலட்டல் கணவனின் மனைவியாக வினோதினி, பாந்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சமுத்திரக் கனியின் மனைவியாக பிரீத்தி, தன் தவறை உணரும் காட்சியில் பளிச்சிடுகிறார். சமுத்திரக்கனியின் மகனாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், தந்தையைப் போலவே அனைத்தையும் செய்கிறார், பேசுகிறார். எந்த மாதிரியான ஈர்ப்பு என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பில், டீன்ஏஜ் ஹார்மோன் விளையாட்டை அற்புதமாகப் பதிவு செய்கிறார்கள் ராகவ்வும், யுவலட்சுமியும். படிப்பில் தீவிர அக்கறை உள்ள இட்லி கடைக்காரர் மகளாக வாழ்ந்திருக்கிறார், கேபிரில்லா.அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னுக்கு வந்து நிற்கிறான், நஷாத். தன் கவிதை நூலை வெளியிடும் மேடையில் உருகும் காட்சி முதல், நண்பர்களுக்கு மொக்கை ஐடியா கொடுத்து, பிரச்னைகளைப் பெரிதாக்குவது வரை நடிப்பில் உயரம் கூட்டியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான பின்னணி இசையில் இளையராஜாவும், கதையை கவனம் சிதறாமல் நடத்திச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனும் இணைந்து, ‘அப்பா’வுக்கு பேருதவி செய்திருக்கிறார்கள்.இன்றைய குழந்தைகள் வளர்ப்பு பற்றியும், கல்விமுறை பற்றியும் பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறது படம். முற்பகுதியில் யதார்த்தமாகச் செல்லும் படம், பிற்பகுதியில் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பில் பிரசாரமாகிவிடுகிறது. குழந்தைகள் பேசும் ஒவ்வொரு வசனமும் ‘நறுக்’, ‘நச்’. மதிப்பெண்ணுக்காக மாணவர்களைக் கொடூரமாக சித்தரிக்கும் பள்ளி கதைக்குள் வந்ததும், அதன் முடிவும் முன்பே தெரிந்துவிடுகிறது என்றாலும் இந்த ‘அப்பா’ இன்றைய தேவைதான்.

பின்செல்

img
இந்த ‘அப்பா’ இன்றைய தேவைதான்

‘உங்கள் மூலம் வந்த புனித ஆத்மாக்களான குழந்தைகளை வளர்க்காதீர்கள்...

மேலும்
img
அப்பா - விமர்சனம்

நடிப்பு: சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவலட்சுமி, விக்னேஷ், ராகவ், நஷாத்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img